×

குலசையில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு மோட்டார் வாகன சட்டத்தை மீறினால் கடும்நடவடிக்கை : எஸ்பி பாலாஜி சரவணன் எச்சரிக்கை

உடன்குடி: முறப்பநாடு அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், பாளை. பகுதி பள்ளியில் எல்கேஜி படித்த ஊத்தப்பாறையை சேர்ந்த ராஜா மகன் செல்வநவீன் என்ற 4 வயது சிறுவன் பலியானான். இதனையடுத்து மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குலசேகரன்பட்டினத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் எஸ்பி பாலாஜி சரவணன் கலந்து கொண்டு ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசுகையில், ‘ஆட்டோவில் செல்லும் பள்ளி குழந்தைகளின் எதிர்காலத்தையும், உங்களை நம்பி ஆட்டோவில் அனுப்பும் குழந்தைகளின் பெற்றோரையும், உங்கள் குடும்பத்தாரையும் மனதில் வைத்துக்கொண்டு கவனத்துடன் வாகனத்தை ஓட்ட வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட இருக்கைகளை விட அதிக குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் செல்லக் கூடாது. மதுபோதையிலோ, செல்போன் பேசிக்கொண்டோ வாகனம் ஓட்டக்கூடாது. விபத்தில்லாமல் வாகனம் ஓட்ட வேண்டும்’ என்றார். தொடர்ந்து குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தை பார்வையிட்டு, அதன் சுற்றுப்புறங்கள் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைக்கப்பட்டுள்ளதா? எனவும், போலீஸ் ஸ்டேஷன் அன்றாட பணிகள் குறித்தும், காவல் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை, கடத்தல் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் இலவச அவசர தொலைபேசி எண் 100 மற்றும் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 95141 44100 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்குமாறும், தகவல் தருபவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் எஸ்பி பாலாஜி சரவணன் கூறினார்.


Tags : Kulasa ,Balaji Saravanan , Awareness for auto drivers in Kulasi Strict action if violated motor vehicle law : SP Balaji Saravanan Warning
× RELATED நாசரேத்தில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு