இரட்டை இலை சின்னம் பெற இறங்கி வந்த ஓபிஎஸ்: கடிதத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிய எடப்பாடி பழனிசாமி..!

சென்னை: உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக ஓபிஎஸ் எழுதிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமானதை அடுத்து ஓபிஎஸ் தொண்டர்களை சந்தித்து வருகிறார். இதனிடையே பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி ஏற்க வேண்டும் என்று ஓசூரில் மேற்கு மாவட்ட அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவின் ஒரு ஒருங்கிணைப்பாளர்களின் ஆதரவாளர்களும் மாறி மாறி சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். அதிமுக உட்கட்சி பூசல் தொடர்பாக இருவரும் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் வரும் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையே உள்ளாட்சி இடைத்தேர்தலில் சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏதுவாக படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த கடிதத்தை வாங்காமல் எடப்பாடி பழனிசாமி திருப்பி அனுப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: