×

விஐடி குழும இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா: தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேச்சு

சென்னை: அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மாணவர்கள் தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கேட்டுக்கொண்டார்.  வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் சார்பில் திருப்போரூர் அருகே காயார் கிராமத்தில் வேலூர் இன்டர்நேஷனல் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இப்பள்ளியின் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. வி.ஐ.டி. கல்விக்குழும தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். வி.ஐ.டி. கல்விக்குழும துணைத் தலைவரும், வேலூர் இன்டர்நேஷனல் பள்ளியின் தலைவருமான ஜி.வி.செல்வம் வரவேற்றார். துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது: வேலூர் சர்வதேச பள்ளியில், குரு சிஷ்யா பரம்பரையின் ஆக்கப்பூர்வ அம்சங்களை தற்கால கற்பித்தல் முறையோடு ஒருங்கிணைக்க, ‘வீட்டு பெற்றோர்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சிப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். பள்ளிக் கல்வியில் தாய்மொழியை பயன்படுத்துவதற்கும் நாம் உரிய கவனம் செலுத்த வேண்டும். எங்கெங்கு முடியுமோ, குறைந்தபட்சம் தொடக்க நிலை வரையிலாவது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்க வேண்டும். ஒருவர் தம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை மொழிகளை கற்றாலும், தாய்மொழியில் வலுவான அடித்தளமிடுவது அவசியம். பல மொழிகளை பயில்வது குழந்தைகளிடையே மேம்பட்ட அறிவாற்றல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவர் தமது தாய்மொழியுடன், பிற மொழிகளிலும் புலமை பெற்றிருப்பது, கலாச்சார பிணைப்புகளை உருவாக்க உதவுவதோடு, புதிய உலக அனுபவங்களை அறிந்து கொள்ளவும் உதவும்.  இவ்வாறு வெங்கய்யா நாயுடு பேசினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி: விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியை வாசித்தார். அதில், கூறியிருப்பதாவது:

 வி.ஐ.எஸ். பள்ளியானது உறைவிடப் பள்ளியாக திட்டமிடப்பட்டுள்ளது. வீடும், பள்ளியுமான இரட்டை நிலைகளையும் கொண்டதாக உள்ளது. வீடு என்பது அன்பையும் பண்பாட்டையும் உள்ளடக்கியது. பள்ளி என்பது அறிவையும் ஆற்றலையும் உள்ளடக்கியது. அத்தகைய அன்பையும், பண்பாட்டையும், அறிவையும், ஆற்றலையும் கற்றுத் தருவதாக இப்பள்ளி அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். ஜி.விசுவநாதன் கல்வி நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்தினாலும் தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகிய நமது விழுமியங்களில் மாறாப்பற்று கொண்டு அதற்கான தமிழியக்கத்தையும், தொடர்ந்து நடத்தி வருபவர் என்பதை இந்த நாடு அறியும். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், தாய்மொழிப்பற்று, தமிழ்ப்பண்பாடு, அறிவுக்கூர்மை, தொண்டுள்ளம் ஆகியவையும் கொண்டவர்களாக தமிழக மாணவர் சமுதாயம் வளர தேவையான விழுமியங்களையும் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

 விஐடி கல்விக் குழுமத் தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன் பேசுகையில், ‘‘கல்லூரி படிப்பில் சேரும் மாணவியருக்கு மாதம் ரூ1000 திட்டம் அறிவிக்கப்பட்டது சிறப்பான ஒன்று. இந்த திட்டத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவில் வெளிநாடுகளில் கிடைப்பது போன்ற நல்ல கல்வியை தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டும். அரசே எல்லாவற்றையும் செய்து விட முடியாது. தனியார் பங்களிப்பு என்பது கல்வியில் மிக அவசியம்’’ என்றார்.  நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தேமுதிக துணை செயலாளர்  எல்.கே.சுதீஷ், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம்,  வேல்ஸ் கல்விக்குழும தலைவர் ஐசரிவேலன், திருப்போரூர் எம்.எல்.ஏ.  எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், முன்னாள்  அதிமுக அமைச்சர்கள் வைகைச்செல்வன், சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து  கொண்டனர். பள்ளி இயக்குனர் சஞ்சீவி நன்றி கூறினார்.

Tags : VIT Group International School Opening Ceremony ,Vice President ,Venkaiah Naidu , VIT Group International School Opening Ceremony: Speaking in Mother Tongue should be Encouraged: Vice President Venkaiah Naidu Speech
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!