இங்கிலாந்துடன் 5வது டெஸ்ட் ரோகித்துக்கு பதிலாக பும்ரா கேப்டன்

லண்டன்: ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, இங்கிலாந்து அணியுடன் 5வது டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள இந்திய அணியின் கேப்டனாக வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியா - இங்கிலாந்து மோதும் 5வது டெஸ்ட் போட்டி, பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டியில் விளையாட இருந்த கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். நேற்று நடந்த 2வது பரிசோதனையிலும் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, ‘5வது டெஸ்டில் ரோகித் விளையாட மாட்டார், அவருக்கு பதிலாக பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கும்’ என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்கும் முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமை பும்ராவுக்கு கிடைத்துள்ளது. 1987ல் கபில் தேவ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  பும்ரா, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாகும் 36வது வீரர் ஆவார்.  

Related Stories: