×

நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்: போலீசார் குவிப்பு, ஊரடங்கு அமல்: என்ஐஏ.யிடம் விசாரணை ஒப்படைப்பு

உதய்பூர்: நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ராஜஸ்தான் முழுவதும் வன்முறை, போராட்டம் வெடித்துள்ளது. பதற்றம் நிலவுதால் போலீஸ் குவிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கைதானவர்களுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதால், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.    
முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்திருந்த பாஜ செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவை ஆதரித்து,  ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மால்டாஸ் பகுதியை சேர்ந்த கன்னையா லால் என்ற டெய்லர், சமூக வலைதளத்தில் சில தினங்களுக்கு முன் பதிவு வெளியிட்டு இருந்தார். இவர், மால்டாஸ் நகரில் உள்ள ஜவுளிக்கடையில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்த கடைக்கு நேற்று முன்தினம் மதியம் வந்த 2 வாலிபர்கள், துணி தைக்க வேண்டும் என்று பேச்சு கொடுத்து, கன்னையா லாலின் தலையை வாளால் வெட்டி கொடூரமான முறையில் கொன்றனர். இந்த  படுகொலையை ஒரு வாலிபர் செய்ய, மற்றொருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர், அந்த 2 வாலிபர்களும் ஒன்றாக இணைந்து, பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்தும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது, வைரலானதால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

வழக்கமாக, ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாத அமைப்பை சேர்ந்த  தீவிரவாதிகள்தான், கொலையை வீடியோ எடுத்து வெளியிடுவார்கள். அதே பாணியில்,  ராஜஸ்தானில் டைய்லர் கன்னையா லாலின் கொலையை 2 வாலிபர்கள் வீடியோ எடுத்து  வெளியிட்டு இருப்பதால், இவர்கள் தீவிரவாத அமைப்பின் பின்னணியை கொண்டவர்களாக  இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், வீடியோ உள்ள காட்சிகள் வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் கன்னையா லாலை கொலை செய்தது ரியாஸ் அக்தாரி, கோஸ் முகமது என தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்.சால் இவர்கள் துண்டப்பட்டு உள்ளனர் என தெரியவந்தது. இதையடுத்து,  டெல்லியில் இருந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு உதய்பூர் விரைந்தனர். அவர்கள், கைது  செய்யப்பட்டுள்ள 2 வாலிபர்களிடம் ரகசிய இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   இதற்கிடையே, கன்னையா லால் படுகொலையை கண்டித்தும், அவரது குடும்பத்தினருக்கு ரூ50 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். இதற்கு உறுதியளித்தால் மட்டுமே உடலை போலீசார் எடுத்து செல்ல அனுமதிப்போம் என்றும் உறவினர்களும், பொதுமக்களும் உதய்பூரில்  போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், வாக்குறுதி நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து, கன்னையா லால் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று காலை பிரேத பரிசோதனை முடிந்து அவரது குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் குலாப் சந்த் கட்டாரியா அஞ்சலி செலுத்தினார். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கன்னையா லால் இறுதி சடங்கு நடந்தது.    

இந்த சம்பவத்தில் வெளிநாட்டு சதி இருக்குமா என்ற சந்தேகத்தில், இந்த  வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.  இதுதொடர்பாக, ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கன்னையா லால் என்பவர் கொடூரமான முறையில்  வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை  (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த விவகாரத்தில் வேறு  அமைப்புகள் மற்றும் சர்வதேச அளவிலான தொடர்புகள் ஏதேனும் ஈடுபட்டுள்ளதா என்ற  கோணத்திலும் விசாரிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ராஜஸ்தான் அரசு சார்பில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொலையாளிகள் வெளியிட்ட வீடியோவால் ராஜஸ்தானில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், இருபிரிவினர் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்க, ராஜஸ்தான் முழுவதும் உள்ள 33 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது. 7 காவல் மாவட்டங்களுக்கு உட்பட இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கொலையை கண்டித்து பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பதற்றத்தை தணிக்கும் வகையில் அப்பகுதியில் கூடுதல்  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள்  நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். இந்நிலையில், இந்த  விவகாரம் தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட் நேற்று மாலை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

தீவிரவாத சக்திகளின் தலையீடு இல்லாமல் நடக்காது -  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நிருபர்களிடம் கூறுகையில், ‘உதய்பூரில் டெய்லரின் கொடூரமான கொலையை எனது அரசு தீவிரமான பிரச்னையாக கருதுகிறது. இது ஒரு பயங்கரமான சம்பவம்.  வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் தீவிரவாத சக்திகளின் தலையீடு இல்லாமல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது.  இதைத்தான் அனுபவம் கூறுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் திட்டங்கள், சதி மற்றும் தேசிய அல்லது சர்வதேச நிறுவனங்களுடனான அவர்களின் தொடர்புகள் ஆகியவை வெளிப்படுத்தப்படும். எஸ்ஐடி விசாரணை தொடங்கி உள்ளது. சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு அரசாங்கம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும். தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அதுவரையில் மாநில மக்கள்  அமைதி காக்க வேண்டும்’ என்றார்.உதவி

கொலை சம்பவம் தொடர்பாக, உதவி சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா கூறுகையில், ‘ஒரு ஏஎஸ்ஐ சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது. எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னையா லாலின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியது அவர்களது தோல்வி,’ என்று கூறி உள்ளார். மதத்தால் நடக்கும் மிருகத்தனத்தை ஏற்க முடியாதுகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்பி டிவிட்டரில் வெளியிட்டுள்ள  பதிவில், ‘இந்த கொடூரமான கொலையால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்,  மதத்தின் பெயரால் நடக்கும் மிருகத்தனத்தை பொறுத்து கொள்ள முடியாது.  கொடூரமான தீவிரவாதத்தை பரப்புபவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். நாம்  அனைவரும் ஒன்றிணைந்து வெறுப்புணர்வை முறியடிக்க வேண்டும்,’ என்று கூறி  உள்ளார்.தலைவர்கள் கண்டனம்

 பாஜ செய்தித் தொடர்பாளர் ராஜ்யவர்தன் ரத்தோர் கூறுகையில், ‘உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் கொல்லப்பட்டது தீவிரவாத தாக்குதல். இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் அரசாங்கமே காரணம்’ என்று தெரிவித்துள்ளார். ‘எதுவாக இருந்தாலும் வன்முறையும் தீவிரவாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. உதய்பூரில் நடந்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், ‘தையல்காரரின் கொடூரமான கொலை தாலிபானி காட்டுமிராண்டித்தனம். குற்றவாளிகள் இஸ்லாம் மற்றும் மனிதநேயம் இரண்டிற்கும் மிகப்பெரிய எதிரிகள்’ என்று தெரிவித்துள்ளார். n டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சாமஜ்வாடி கட்சி தலைவர்  அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித்  தலைவர் ஓவைசி, அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜமியத் உலமா-இ-ஹிந்த் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்  தெரிவித்துள்ளனர்.

Tags : Taylor ,Nupur Sharma ,Rajasthan ,NIA , Taylor beheads Nupur Sharma in Rajasthan
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...