×

உள்ளாட்சி தேர்தல் படிவத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக எடப்பாடிக்கு ஓபிஎஸ் திடீர் கடிதம்

சென்னை: தமிழகத்தில்  காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்தந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ‘ஏ’ மற்றும் ‘பி’ என்ற இரண்டு படிவங்களை சம்ர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் அந்தந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கையெழுத்து போட வேண்டும். அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்புமனு படிவங்களில் கையெழுத்திட்டு வந்தனர்.

தற்போது அதிமுகவில் உட்கட்சி சர்ச்சையினால் ஒருங்கிணைப்பாளர்களின் பதவிகள் காலாவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவரும் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால், இந்த படிவத்தில் யார் கையெழுத்து போடுவார்கள் என்ற புதிய சர்ச்சை  எழுந்துள்ளது. ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களை வேட்புமனுக்கள் திரும்ப  பெறுவதற்கான கடைசி நாள் 30ம் தேதி ஆகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்குள் இந்த படிவங்களை வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேணடும். இல்லையென்றால் அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் அல்லது சுயேச்சை வேட்பாளர்களாகத் தான் போட்டியிட முடியும்.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏதுவாக படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வம் அனுப்பிய கடிதத்தை பெற்றுக் கொள்ளாமல் எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : OBS ,Edapadi , OPS sudden letter to Edappadi regarding signing of local election form
× RELATED மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் அணி...