×

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை: லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக  ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் மற்றும் குடும்பத்தினர் மீது  தொடர்ந்த  வழக்கில் விரைந்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் இருந்த போது, 2016 முதல் 2021ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனடிப்படையில், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

அவர் பெயரிலும், அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக, 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்த பிறகு நீண்ட நாட்களாகியும் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags : AIADMK ,ex-minister ,KP Anpalagan ,ICC , AIADMK ex-minister KP Anpalagan indicted in anti-corruption case: ICC orders anti-corruption department
× RELATED ஓட்டேரியில் வீதி வீதியாக சென்று...