கொடைக்கானல் வனத்துறை விழிப்புணர்வு பிளாஸ்டிக் பாட்டிலும் பில்டிங் ஆனது: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு

கொடைக்கானல்: மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை கொண்டு கொடைக்கானல் வனத்துறையினர் கட்டிடம் அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களை  பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு லிட்டர், 2 லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் முழுமையாக தடை செய்யப்பட்டது. இதன் பலனாக கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைந்து வந்தாலும் தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் கொண்டு வருவதை தடுக்க முடியவில்லை.

மேலும் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனை தவிர்க்கும் விதமாக கொடைக்கானல் வனத்துறையால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிளாஸ்டிக் பாட்டில்களில் மண்ணை அடக்கி, அதனை வைத்தே ஒரு அறையுடன் வீடு கட்டப்பட்டது. தற்போது இந்த பிளாஸ்டிக் பாட்டில் வீடு சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. கொடைக்கானலில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது மன்னவனூர் சூழல் சுற்றுலா பகுதி. இப்பகுதியில் தான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் மண்ணை நிரப்பி அடைத்து அதற்கு ஒரு உருவமும் கொடுத்துள்ளனர்.

பார்ப்பதற்கு தத்ரூபமாக செங்கல் கட்டிடத்தை போன்று காட்சியளிக்க கூடிய இந்த ஒரு அறையுடன் கூடிய வீடு முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில்களால் ஆனது. இதன் உறுதித்தன்மையும் அதிகமாகவே இருக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வனத்துறையினர் ஏற்படுத்தியுள்ள இந்த விழிப்புணர்வு சுற்றுலாப் பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் தடை செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் மன்னவனூர் சூழல் பூங்கா பகுதியில் வனத்துறையினர் கட்டி வைத்த இந்த பிளாஸ்டிக் அறை ஒரு முன்னுதாரணமாக இருப்பதாகவும், மறுசுழற்சிக்கு வழி இல்லாத இடங்களில் இதுபோன்று செய்யலாம் எனவும் சுற்றுலா பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: