கஞ்சா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தமிழக அரசு நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு

மதுரை: போதைப்பொருள் ஒழிப்புப் பணிகளில் கடும் நடவடிக்கை எடுத்துவரும் தமிழக அரசு மற்றும் போலீசாருக்கு ஐகோர்ட் மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. கஞ்சா விற்பனை வழக்கில் ஜாமீன் கோரியும், முன்ஜாமீன் கேட்டும் ஐகோர்ட் மதுரை கிளையில் சிலர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ‘‘கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கில் அரசுத்தரப்பில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். அரசு கூடுதல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி, ‘‘தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை, கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்வோருக்கு எதிராக தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சம்பந்தப்பட்டோரின் அசையும், அசையா சொத்துக்களும் முடக்கப்படுகிறது.

குறிப்பாக ஆதார், பான் கார்டு போன்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வங்கிக்கணக்குகளை முடக்கி கடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். அப்போது நீதிபதி, ‘‘குட்கா விற்பனை செய்வோருக்கு எதிராக தமிழக அரசு மற்றும் போலீசார் துரித நடவடிக்கைகள் எடுத்து வருவதை அறிவேன். மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா வியாபாரிகள், அவர்களது உறவினர்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. கஞ்சா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பில் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோரின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது’’ என்றார். பின்னர், மனுக்களின் மீதான விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: