திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும்: மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

சென்னை: அறிவித்தபடி ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பொய் வழக்கு பதிவு செய்து, அவருடைய இல்லம் மற்றும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்னையில், எஸ்.பி.வேலுமணி இந்த இயக்கத்திற்கு தூணாக நின்று, இந்த இயக்கத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அவரை அச்சுறுத்த வேண்டும், பணிய வைக்க வேண்டும் என்று யாரோ சொல்லி, அவரை மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளனர்.

இப்போது அவர்கள் நோக்கம், எண்ணம் எல்லாம் எப்படியாவது எஸ்.பி.வேலுமணியை அச்சுறுத்தி, பணியவைத்து, இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்துகொண்டிருக்கின்ற, இந்த இயக்கத்தை காட்டிக்கொடுப்பவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்பதுதான். இது நடக்காது. அதிமுக தொண்டர்களை மிரட்டலாம், பணிய வைக்கலாம் என்று நினைத்தால் அது முடியாது. ஓ.பன்னீர்செல்வத்தின் பின்புலமாக இந்த அரசு இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு, நீதிமன்றத்தில் எங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளோம். வழக்கறிஞர்கள் மூலமாக முறையாக அளித்திருப்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. அறிவித்தபடி ஜூலை 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு திட்டமிட்டபடி சிறப்பாக, எழுச்சியாக நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: