அரியலூரில் விமானம் விழுந்ததாக வதந்தி

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் மற்றும் வங்காரம் பகுதியில் உள்ள அரசு வனப்பகுதியில் நேற்று மதியம் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து ராணுவ விமானம் விழுந்து வெடித்து சிதறிவிட்டது என்ற தகவல் காட்டுத் தீயாக பரவியது.

இதைத்தொடர்ந்து சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் உள்ளிட்ட கிராம மக்கள் திரண்டு வந்து, வனப்பகுதியில் தேடினர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வனப்பகுதியில் சுற்றி, சுற்றி வந்து தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் வங்காரம் வனப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் அப்பகுதி இளைஞர்கள் கொடுத்த தகவலின்பேரில் செந்துறை போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். 3 108 ஆம்புலன்சுகளும் வனப்பகுதிக்கு வந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  

வனப்பகுதியில் விமானம் விழுந்ததற்கான தடயங்கள் தென்படாததால், பலர் திரும்பி சென்றனர். ஆம்புலன்சுகளும் அங்கிருந்து சென்றன. இதுகுறித்து கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்ததாவது: அரியலூர் மாவட்டத்தின் எந்த பகுதியிலும் விமான விபத்து ஏற்படவில்லை.

விமான விபத்து ஏற்பட்டதாக தவறாக பரப்பப்படும் வதந்தியை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். அச்சமடையத் தேவையில்லை. விமான விபத்து ஏற்பட்டதாக தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் யாரும் பரப்ப வேண்டாம் என்றார்.  திடீரென எதனால் சத்தம் உண்டானது என புவியியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: