×

ஓட்டப்பிடாரம் அருகே பரபரப்பு, ஆம்னி பஸ் எரிந்து சேதம்; பயணிகள் உயிர் தப்பினர்

ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே ஆம்னி பஸ் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது. பயணிகள் உயிர் தப்பினர். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் இருந்து கோவைக்கு நேற்றிரவு 8 மணி அளவில் 36 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆம்னி பஸ் புறப்பட்டது.  இந்த பஸ்சை காயாமொழி குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (34) என்பவர் ஓட்டினார். ஓட்டப்பிடாரம் அடுத்த புதூர்பாண்டியபுரம் டோல்கேட் பகுதியை இரவு 10 மணி அளவில் கடந்த போது பஸ்சில் திடீரென்று மின்கசிவு ஏற்பட்டு தீப்பொறி வந்துள்ளது.

 இதையடுத்து டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்திய போது, திடீரென்று தீ மளமளவென பஸ்சுக்குள் பரவத் தொடங்கியது. உடனே பயணிகள் அனைவரும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். இதையடுத்து அனைவரும், அவசர அவசரமாக   இறக்கி விடப்பட்டனர். இதற்கிடையில் தீ பஸ் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது. பஸ்சில் இருந்த பயணிகளின் உடமைகள் அனைத்தும் எரிந்து நாசமானது.

 இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி குமார் தலைமையில் சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.  இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர். மின்கசிவு காரணமாக  தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Omni , Commotion near the racetrack, Omni bus burn damage; The passengers survived
× RELATED திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்...