×

விழுப்புரம் அருகே சாலையை கடக்க முயன்ற 7 வயது சிறுமி கார் மோதி பலி: கிராமமக்கள் சாலைமறியல் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சகோதரியுடன் சாலையை கடக்க முயன்ற 7 வயது சிறுமி கார் மோதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் அருகே இருவல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய 7 வயது மகள் நிலா, தனது சகோதரி ஈஸ்வரியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் மோதியதில் சிறுமி நிலா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த ஈஸ்வரி சிகிச்சைக்காக உண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த கிராம மக்கள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 3 கி.மீ. தூரம் வாகனங்கள் தேக்கம் அடைந்ததால் பரபரப்பு நிலவியது. நிகழ்விடத்துக்கு சென்ற விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தார். விபத்து நேரிடும் பகுதியில் பாலம் அமைக்க அதிகாரிகளுடன் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியலால் அந்தப்பகுதியில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.         


Tags : Viluppuram , Villupuram, road, girl, car, victim, villagers, road block
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...