ஊட்டி அதிமுக அலுவலக பெயர் பலகையில் ஓபிஎஸ் வெளியே... வேலுமணி உள்ளே...

ஊட்டி: ஊட்டி அதிமுக அலுவலக பெயர் பலகையில் இருந்த ஓபிஎஸ் படம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் வேலுமணி படம் சேர்க்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை மாற்றி ஒற்றை தலைமை கொண்டு வந்து பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஆகவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டனர். இதற்கேற்ப நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்தும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆனால், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். இதனால், அண்மையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கட்சி பேனர்களில் இடம்பெற்றிருந்த பன்னீர்செல்வத்தின் படங்கள், பெயர் போன்றவற்றை அகற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன்படி, ஊட்டி- கூடலூர் சாலையில் என்சிஎம்எஸ் பார்க்கிங் அருகே அமைந்துள்ள நீலகிரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் ஓபிஎஸ் படம் இடம் பெற்றிருந்தது. தற்போது, அந்த படம் அகற்றப்பட்டு அதிமுக தலைவர்கள் படங்களுடன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோர் படங்கள் இடம்பெற்றுள்ளன. இது அதிமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: