சென்னை முகப்பேர் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: வேதியியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சென்னை:சென்னையில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர், பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பேசிய உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11,12ம் வகுப்பு வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர் ராமசாமி. இவர் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகளின் பெற்றோர்களால் குழந்தைகள் நல குழுவிடம் புகார் அளித்தனர்.

கொரோனா பொது முடக்கம் அமலில் இருந்தபோது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றதால் 11,12ம் வகுப்பு பள்ளி மாணவிகளின் தொடர்பு எண்கள் அனைத்தையும் ஆசிரியர் ஸ்ரீதர் சேமித்து வைத்துக் கொண்டதாகவும், அதன் பின்னர் பள்ளி மாணவிகளிடம் நாம் இருவரும் வெளியே செல்லலாம் எனக்கூறி குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் என்ற அடிப்படையில் அவரை நம்பி அவருடன் வெளியே சென்ற மாணவிகளிடம் ஸ்ரீதர் ராமசாமி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு ஏராளமான மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் மாணவிகளின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

இதுமட்டுமல்லாது, வகுப்பறையில் யாருமில்லாத போது ஸ்ரீதர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் வேதியியல் ஆசிரியரான ஸ்ரீதர் மாணவிகளுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் உரையாடல்கள் மற்றும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நேற்றைய தினம் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல குழு பள்ளியில் விசாரணையை துவங்கி ஆசிரியர்களிடமும், மாணவ, மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். பள்ளி சார்பிலும் ஆசிரியர் ஸ்ரீதர் ராமசாமி மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக குழந்தைகள் நல ஆணையம் மற்றும் பள்ளி சார்பிலும் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று திருமங்கலம் அனைத்து காவல்நிலைய போலீசார் அரசுப்பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே இதுதொடர்பாக கல்வித்துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் அத்துமீறி நடந்தது உறுதி செய்யப்பட்டதால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.    

Related Stories: