×

தப்பிக்குமா உத்தவ் தாக்கரே அரசு!: ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது சிவசேனா..!!

டெல்லி: சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா முறையிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளார். இதனால், மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, மராட்டிய சட்டப்பேரவையில் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நாளை மாலைக்குள் நிரூபிக்க ஆளுநர் கோஷியாரி கெடு விதித்துள்ளார். இதற்காக நாளை சட்டசபையை கூட்டும்படி சட்டசபை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், கவர்னரின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனுத்தாக்கல் செய்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்து சிவசேனா கட்சியின் கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

16 எம்.எல்.ஏ. தகுதி நீக்க விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் ஆளுநர் ஆணை சட்டவிரோதமானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆளுநர் அவசர கதியில் உத்தரவு பிறப்பித்துள்ளார் என சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்திருக்கிறார். அசாமில் தங்கியுள்ள ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இன்று கோவா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து நாளை மும்பை சென்று சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags : Uttav Dakare Govt. ,Governor ,Supreme Court ,Shiva Sena , Governor, No-confidence vote, Supreme Court, Shiv Sena
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...