ராஜஸ்தானில் டெய்லர் படுகொலை.. மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளை ஏற்க முடியாது: ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம்!!

உதய்பூர்:  ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட டெய்லர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், பொதுமக்கள் அமைதி காக்க அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உதய்பூரில் டெய்லர் தலை துண்டித்து கொல்லப்பட்டது கொடூரமான செயல் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து இருக்கும் அவர், நாட்டு மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உதய்பூர் கொடூர கொலை அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டு இருக்கும் அவர், மதத்தின் பெயரிலான வன்முறைகளை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெறுப்புணர்வை விரட்டுவோம் என்றும் கூறி இருக்கும் ராகுல் காந்தி, அனைவரும் சகோதரத்துவத்தையும் அமைதியையும் கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதே போல ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஒவைசி உதய்பூர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தங்கள் கட்சியின் கொள்கையின் படி சட்டத்தை எவரும் தம் கைகளில் எடுக்கக் கூடாது. இந்த சமூகத்தின் குற்றவாளிகள் கைது செய்து கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: