×

பொது விவாதம், தகவல் பரவல் உட்பட கருத்து சுதந்திரத்துக்கு பாதுகாப்பு; ஜி7 மாநாட்டில் மோடி உறுதி

எல்மா: சுதந்திரமான பொது விவாதம், ஆன்லைன், ஆப்லைனில் சுதந்திரமான தகவல் பரவல்  உள்ளிட்ட கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாக ஜி7 நாடுகளும், இந்தியா உள்ளிட்ட 5 நட்பு நாடுகளும் உறுதிமொழி எடுத்துள்ளன. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளைக் கொண்ட ஜி7 அமைப்பின் 48வது உச்சி மாநாடு ஜெர்மனியில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடியும் பங்கேற்றார். மாநாட்டில், பருவநிலை மாற்றம், உக்ரைன் போர், உலகளாவிய பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதோடு இந்த மாநாட்டில், கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாக ஜி7 நாடுகளும் இந்தியா மற்றும் 4 நட்பு நாடுகளும் உறுதிமொழி எடுத்துள்ளன.

இதுதொடர்பாக, ‘ஜனநாயக அறிக்கை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சுதந்திரமான பொது விவாதம், சுதந்திரமான ஊடகங்கள், ஆன்லைன், ஆப்லைனில் சுதந்திரமான தகவல் பரிமாற்றம், மக்கள் தங்கள் விருப்பப்படி பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமை ஆகியவற்றை உறுதி செய்ய உலக தலைவர்கள் உறுதிபூண்டுள்ளனர். மேலும், அமைப்புகளின் சுதந்திரத்தை மதிப்பதாகவும், அமைதியான முறையில் கூட்டங்கள் நடத்த அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உலகளாவிய, செயல்படக்கூடிய, நம்பகமான மற்றும் பாதுகாப்பான இணையத்தை உறுதி செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

இந்த கொள்கைகள் மூலம் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்க ஜி7 தலைவர்களும், இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் தலைவர்களும் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒன்றிய பாஜ அரசு பேச்சு சுதந்திரத்தையும் சமூக செயற்பாட்டாளர்களையும் முடக்குவதாக உலக அளவில் குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், இந்த உறுதிமொழியை பிரதமர் மோடி ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, மாநாட்டில் உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக ரஷ்யாவை பொருளாதார ரீதியாக பதிலடி தர ஜி7 நாடுகள் முடிவு செய்துள்ளன. ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு வர்த்தக வருவாயை முடக்கவும், ரஷ்யாவின் தங்கத்தை இறக்குமதி செய்ய தடை விதிக்கவும் உறுதி பூண்டுள்ளன. உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய உணவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ரூ.35 கோடி செலவிடவும் முடிவு செய்துள்ளன.

Tags : Modi ,G7 , Protection of freedom of expression, including public debate and dissemination of information; Modi confirms at G7 summit
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...