×

ரணிலின் நீண்ட போராட்டத்துக்கு வெற்றி.! அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

கொழும்பு: அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் 22வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை கடும் பொருளாதாரத்தில் சிக்கி தவிக்க, ராஜபக்சேவின் தவறான பொருளாதார கொள்கையே காரணம் என கூறி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இருப்பினும், அதிபர் பதவியில் இருந்து கோத்தபயவும் வெளியேற வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, புதிய பிரதமராக பதவியேற்ற ரணில், ‘அதிபரின் அதிகாரத்தை குறைத்து, நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது போன்ற முக்கிய அம்சங்கள் அடங்கிய 21வது சட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டும்’ என்று வலியுறுத்தினார். இதற்கு உடன்படுவதாக கூறி விட்டு, தங்கள் ஆதரவு எம்பி.க்கள் மூலம் 21வது சட்டத் திருத்தத்துக்கு அதிபர் கோத்தபய முட்டுக்கட்டை போட்டார். புதிய அமைச்சரவையில் அதிபர் கோத்தபயவின் ஆட்களே அதிகம் உள்ளதால், இந்த சட்டத் திருத்தத்தை அமைச்சரவையில் தாக்கல் செய்ய விடாமல் தடுக்கப்பட்டது.

இந்நிலையில், நீண்ட போராட்டத்துக்கு பின், கடந்த வாரம் இலங்கை அமைச்சரவையில் புதிய சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது.  ஏற்கனவே 21வது சட்டத் திருத்தமாக வேறு ஒன்று நிறைவேற்றப்பட்டு இருப்பதால், அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் சட்டம், 22வது சட்டத் திருத்தமாக தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு இலங்கை அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், இந்த சட்டத் திருத்த மசோதோ விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது நிறைவேற்றப்பட்டால், வானளாவிய அதிகாரம் கொண்ட அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, நாடாளுமன்றத்துக்கே மீண்டும் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்.


Tags : Ranil ,Cabinet ,President ,Sri Lankan Parliament , Victory for Ranil's long struggle! Cabinet approves bill to reduce President's powers: Soon to be tabled in the Sri Lankan Parliament
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...