லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். முதல் சுற்றில் குரோஷியாவின் ஜானா ஃபெட்டுடன் (25 வயது, 252வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (21 வயது, போலந்து), அதிரடியாக 6-0 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டிலும் புள்ளிகளைக் குவித்த அவர் 6-0, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.