×

மீண்டும் அதிரடி தாக்குதல் உக்ரைன் வணிக வளாகத்தில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல்; 16 பேர் பலி; 59 பேர் காயம்

கிவ்: உக்ரைன் வணிக வளாகத்தில் ரஷ்ய படைகள் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 16 பேர் பலியாகினர். 59 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து நடத்தி வரும் இந்த தாக்குதலால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். நேட்டோ அமைப்பில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அதன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி தாக்குலை தொடங்கியது. அந்நாட்டின் முக்கிய நகரங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது, இந்த போர் 100 நாட்களை தாண்டி தொடர்கிறது.

உக்ரைன் தலைநகரமான கீவ் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படைகள், கடந்த ஏப்ரல் இறுதியில் தாக்குதலை நிறுத்தி விட்டு பின்வாங்கியது. கிழக்கு உக்ரைனில் மட்டுமே தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், மத்திய உக்ரைன் நகரமான கிரெமென்சுக் பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் மீது ரஷ்ய படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் வணிக வளாகம் தீப்பற்றி எரிந்தது. வளாகத்தில் இருந்த பொதுமக்கள், உடல் கருகி கூச்சலிட்டனர்.

பலர், தங்களது உயிர்களை காப்பாற்றி கொள்ள அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். அந்த இடமே புகைமண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து தீயணைப்பு படை வீரர்கள், மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தில் 16 பேர் இறந்ததாகவும், 59க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொல்டாவா பிராந்தியத்தின் ஆளுநர் டிமிட்ரோ லுனின் கூறியுள்ளார். போர் தொடங்குவதற்கு முன்பு கிரெமென்சுக் நகர பகுதியில் 2,20,000 மக்கள் வசித்ததாகவும், அந்த நகரத்தை ஏவுகணைகள் தாக்கியபோது, ​​ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வணிக வளாகத்தில் இருந்ததாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். தற்போது, ‘வணிக வளாகம் தீப்பற்றி எரிகிறது, மீட்பு படையினர் தீயை அணைக்க போராடுகிறார்கள், பலியானவர்களின் எண்ணிக்கையை நினைத்து பார்க்க இயலாது’ என்று ஜெலன்ஸ்கி தமது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

‘தாக்குதல் நடத்தப்பட்ட வணிக வளாகத்தில் அதிகளவில் மக்கள் இருந்தபோது, குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அதிகளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்த ரஷ்ய படைகள் திட்டமிட்டது தெரியவந்துள்ளது’ என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தனது டுவிட்டர் பதிவில், ‘இன்று ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலால் உலகம் திகிலடைந்துள்ளது. மக்கள் அதிகமாக இருந்த இந்த வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது. தொடர்ச்சியான அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், ‘ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் “கொடுமை மற்றும் காட்டு மிராண்டித்தனத்தின் ஆழத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகமும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தனது டுவிட்டர் பதிவில், ‘பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக குண்டுவீசி தாக்குதல் நடத்துவதன் மூலம், ரஷ்யா சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பயங்கரமான மீறல்களை தொடர்கிறது’ என்று தெரிவித்துள்ளது.

Tags : Repeated offensive, Ukrainian shopping mall, Russian forces, missile attack
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...