ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபுவை, வீழ்த்த நடிகர் விஷாலை களம் இறக்க; ஜெகன்மோகன் திட்டம்

திருமலை: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபுவை வீழ்த்த நடிகர் விஷாலை களம் இறக்க முதல்வர் ஜெகன்மோகன் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் வரும் 2024ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியும் தேர்தல் பணிக்கு இப்போதே தயாராகி வருகின்றன.

இந்த தேர்தலில் மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளான 175ஐயும் கைப்பற்றிவிட வேண்டும் என முதல்வர் ஜெகன்மோகன் சில நாட்களுக்கு முன்பு நடந்த தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். கடந்த தேர்தலில் 151 தொகுதிகளை அவரது கட்சி வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியது. சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதி சந்திரபாபுவின் கோட்டை என அழைக்கப்படுகிறது. இங்கு சந்திரபாபு 7 முறை போட்டியிட்டு தொடர் வெற்றி ெபற்று வருகிறார்.

கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சந்திரபாபுவின் கோட்டையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. எனவே சட்டமன்ற தொகுதியையும் சந்திரபாபுவிடம் இருந்து கைப்பற்ற ஜெகன்மோகன் இலக்கு நிர்ணயித்துள்ளார். அண்மையில் தனது கட்சி கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன், ஆந்திர சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி இல்லாத நிலை உருவாக வேண்டும். குறிப்பாக 2024ல் சட்டமன்ற கூட்டரங்கில் ஒரு சீட் கூட எதிர்க்கட்சிகள் பெறக்கூடாது.

அவர்களை சட்டமன்றத்திற்குள் நுழையவிடக்கூடாது என பகிரங்கமாக ேபசினார். அதற்கான வேட்பாளர்கள் தேர்வை இப்போதே செய்ய தொடங்கிவிட்டார். இந்நிலையில் சந்திரபாபு, லோகேஷ், பவன்கல்யாண் மற்றும் எதிர்க்கட்சிகளின் பலம் வாய்ந்த தொகுதிகளில் அவர்களை வீழ்த்த ஒய்எஸ்ஆர் கட்சி சார்பில் பிரபலங்களை வேட்பாளர்களாக நிறுத்த ஜெகன்மோகன் வியூகம் வகுத்துள்ளார். அதன்படி சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதி தமிழக-ஆந்திர எல்லையையொட்டி உள்ளது.

அங்கு அதிக அளவில் தமிழர்கள் வசிக்கின்றனர். எனவே குப்பம் தொகுதியில் சந்திரபாபுவை வீழ்த்த பிரபல தமிழ், தெலுங்கு நடிகரான விஷாலை நிறுத்த ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கேற்ப கடந்த சில மாதங்களாக முதல்வர் ஜெகன் மோகனை, நடிகர் விஷால் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார். முதலில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டது.

ஆனால் அவர் அடிக்கடி வந்து செல்வதோடு தனது மூத்த நிர்வாகிகளுடனும் விஷாலை முதல்வர் அறிமுகப்படுத்தி பேச வைத்துள்ளார். முதல்வர் ஜெகன்மோகனை போன்றே நடிகர் விஷாலும் ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர். விஷாலின் பெரும்பாலான உறவினர்கள் குப்பம் தொகுதியில் வசிக்கின்றனர்.

எனவே அதற்கேற்ப தேர்தல் பணியை மேற்கொண்டு சந்திரபாபுவை வீழ்த்த ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் கூறிவருகின்றனர். இதற்கிடையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு, தனது தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ததோடு, வீதிவீதியாக சென்று மக்களை சந்தித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: