×

வாணியம்பாடி அருகே ஏரிக்கரை பகுதியில் 50 ஆண்டுகளாக வசிக்கும் எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்-குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

திருப்பத்தூர் :  வாணியம்பாடி அருகே ஏரிக்கரை பகுதியில் வசிக்கும் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். அப்போது, பொதுமக்கள் பலர் குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா, நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து, ஆதரவற்ற விதவை சான்று அரசு வேலை வேண்டி மனு அளித்தனர்.

இதில், வாணியம்பாடி அருகே உள்ள கோவிந்தாபுரம் ஊராட்சி வன்னிய புதூர் கிராமத்தை சேர்ந்த 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: நாங்கள் சுமார் 50 வருடங்களாக வன்னிய புதூர் அருகே உள்ள ஏரிக்கரை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம் தற்போது நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக தெரிவித்தனர். எங்களது வீடுகளை அகற்ற வேண்டும் என்று வருவாய்த் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.கூட்டத்தில் வேளாண்மைத்துறை, காவல்துறை, இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு  மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 323 மனுக்கள் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vaniyambadi , Tirupati: Residents of the lake area near Vaniyambadi have been asked to provide alternative accommodation to the Collector at the grievance meeting.
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...