ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் மகன் அபகரித்த சொத்தை மீட்டுத்தர வேண்டும்-கலெக்டரிடம் விவசாயி கோரிக்கை

ராணிப்பேட்டை : மகன் அபகரித்த சொத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் விவசாயி கோரிக்கை மனு அளித்தார்.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மொத்தம் 233 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும், என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதில், ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன்(75) என்பவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். எனது பரம்பரை சொத்தில் வாழ்ந்து வருகிறேன். இந்நிலையில், எனது மகன் பெருமாள் கடந்த 2ம் தேதி கடன் பத்திரம் எழுதி கடன் வாங்கப்போவதாக கூறி என்னிடம் கையெழுத்து வாங்கினார்.

நாளடைவில் எனது மகன் என்னை ஏமாற்றி சொத்தை அபகரித்ததை அறிந்து மிகவும் மன உளைச்சல் அடைந்தேன். இதுகுறித்து எனது மகனிடம் கேட்டபோது, என்னை அவதூறாக பேசியதோடு என்னையும் எனது மனைவியையும் பராமரிக்காமல் விட்டுவிட்டார். எங்களுக்கு எந்தவித வருமானமும் இல்லாத நிலையில் குடும்பம் நடத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம்.

எனவே, என்னை ஏமாற்றி தயார் செய்த ஆவணத்தை ரத்து செய்து எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட்டார்.கலவை தாலுகா நம்பித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஜீவா(14) என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது தாய் கூலி வேலை செய்து வருகிறார். பிறவி ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான நான் திமிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறேன். எனவே, எனக்கு உதவித்தொகை வழங்கிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உரிய விசாரணைகள் மேற்கொண்டு கடும் ஊனமுற்றோர் என்ற அடிப்படையில் ₹2 ஆயிரம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமாருக்கு உத்தரவிட்டார். இதில், டிஆர்ஓ குமரேஷ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தாரகேஸ்வரி, கலால் உதவி ஆணையர் சத்யபிரசாத், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளவரசி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: