வெடுருகுப்பம் மண்டலம் போடபண்டத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்-கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது

சித்தூர் : சித்தூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு கழிவுநீர் கால்வாய் செல்லும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்களிடம் இருந்து மீட்டு தரவேண்டும் என வெடுருகுப்பம் மண்டலம் போடபண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:இந்திராகாந்தி  பிரதமராக இருந்தபோது எங்கள் கிராமத்தில் ஒட்டர் குலத்தினருக்கு அப்போதைய மாவட்ட கலெக்டர், தலா 3 சென்ட் நிலம் வழங்கி வீடுகள் கட்டிக் கொடுத்தனர். தற்போது எங்கள் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் கிராமத்தில் இருந்து கழிவுநீர் அருகே உள்ள குளத்தில் கலக்கப்படுகிறது. காரணம், எங்கள் கிராமத்திலிருந்து செல்லும் கழிவுநீர் கால்வாயை எங்கள் கிராமத்தை சேர்ந்த உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி விட்டனர்.

 இதனால் கழிவுநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. துர்நாற்றத்தால் எங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். மாலை நேரங்களில் கொசுக்கள் தொல்லை அதிக அளவு உள்ளது. டெங்கு மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் வர காரணமாக இருக்கிறது. இதுகுறித்து பலமுறை கிராம வருவாய்த்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் மண்டல வருவாய் துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

ஆகவே மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்தில் இருந்து செல்லும் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து செய்தவர்களிடம் இருந்து மீட்டு கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து குளத்தில் கலக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு கிராம மக்கள் தெரிவித்தனர். இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: