கோவில்பட்டி அருகே பைக் மீது கார் மோதி மகனுடன் ஏட்டு பலி-மனைவி, மற்றொரு மகன் காயம்

கோவில்பட்டி : விளாத்திகுளம் அடுத்த வெங்கடேஷ்வராபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் ராஜா மார்சல் (38). காடல்குடி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று ராஜா மார்சல், மனைவி தேவிகா (30), மகன்கள் ரஸ்வந்த் (6), ரிஷாந்த் (4) ஆகியோருடன் திட்டங்குளம் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் துணி எடுத்து விட்டு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். தொழிற்பேட்டை முன்பு சாலையை கடக்க முயன்ற போது, எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கிச் சென்ற கார் திடீரென பைக் மீது பயங்கரமாக மோதியது.

 

இந்த விபத்தில் பைக்கில் இருந்து ராஜா மார்சல் உள்பட 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். தகவலறிந்து கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி சிறுவன் ரிஷாந்த் உயிரிழந்தான். ராஜாமார்சல் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று அவர் இறந்தார்.விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து, கார் டிரைவர் விளாத்திகுளம் பூமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவராமச்சந்திரன் (24) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: