×

காரைக்குடி - திருச்சி டெமு ரயில் ஜூலை 18 முதல் மீண்டும் இயக்கம்

காரைக்குடி : காரைக்குடி - திருச்சி டெமு ரயில் ஜூலை 18ம் தேதி முதல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து காரைக்குடி வழியாக விருதுநகர் வரை டெமு ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரயில் இயக்கப்படவில்லை. பின்னர் கடந்த நவம்பர் மாதம் முதல் காரைக்குடி - விருதுநகர் இடையே ரயில் இயக்கப்பட்டது.

நிறுத்தப்பட்ட காரைக்குடி - திருச்சி ரயில் சேவையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என தொழில் வணிகக்கழக தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் உள்பட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், ரயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து காரைக்குடி - திருச்சி இடையே மீண்டும் டெமு ரயில் ஜூலை 18ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஜூலை 18ம் தேதி இந்த டெமு ரயில் விருதுநகரில் இருந்து கிளம்பி காலை 9.25 மணிக்கு காரைக்குடி வரும். காரைக்குடியில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு செட்டிநாடு, திருமயம், புதுக்கோட்டை, வெள்ளனூர், கீரனூர் வழியாக திருச்சிக்கு காலை 11.35 மணிக்கு செல்லும். மீண்டும் அதேநாள் மாலை 4 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு காரைக்குடிக்கு மாலை 5.50 மணிக்கு வரும். மாலை 6 மணிக்கு புறப்பட்டு சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகர் வரை செல்லும். காரைக்குடி - திருச்சி டெமு ரயில் ஞாயிற்றுக்கிழமை இயங்காது என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Karaikudi, Trichy, DEMU Train, Passenger train
× RELATED ஓட்டுப்போட வந்த முதியவர்கள் 3 பேர் மயங்கி விழுந்து சாவு