×

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்: அரசுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு பரிந்துரை

சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவர ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. கடந்த 10-6-2022 அன்று ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. கே. சந்துரு அவர்கள் தலைமையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்திடவும் குழு ஒன்றினை அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டார்கள்.

இக்குழு தனது 71 பக்க அறிக்கையினை நேற்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது. அதில்; ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவர வேண்டும். ஏற்கனவே கொண்டுவரப்பட்ட சட்டத்தை கைவிட்டு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். ஆன்லைன் விளையாட்டுக்களால் திறன்கள் மேம்படுவதாக சொல்வது தவறானது. கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களால் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பொதுமக்களின் உடல்நலம் ஆன்லைன் விளையாட்டால் பாதிக்கப்படுகிறது. இயல்பு நிலையில் வாழ்வதற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டுகள் இருக்கின்றன.

அரசியல் சாசனம் 252-ஐ பயன்படுத்தி ஒன்றிய அரசு தேசிய அளவில் சட்டம் கொண்டுவர வேண்டும். உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யலாம். பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. முறைப்படுத்த இயலாது என்பதால் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Judge ,Chandru , New law should be enacted to ban online games: Retired Judge Chandru Committee recommends to the Government of Tamil Nadu
× RELATED பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு...