விமானப்படையில் சேர அக்னிபாதை திட்டத்தில் 94,000 பேர் விண்ணப்பம்

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தின்கீழ் விமான படையில் சேர 94 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அக்னிபாதை என்ற ராணுவ ஆட்சேர்ப்புத் திட்டத்தை  கடந்த 14ம் தேதி ஒன்றிய அரசு அறிவித்தது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களை சேர்க்க கடும் எதிர்ப்பு கிளம்பி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமான படையில் சேருவதற்கு விண்ணப்பங்கள் கடந்த 24ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. விமான படையில் சேருவதற்கு முதல் நாளில் 3 ஆயிரத்து 800 பேர் விண்ணப்பித்ததாக விமான படை தெரிவித்தது. இந்நிலையில், நேற்று வரை 94 ஆயிரத்து 281 பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அடுத்த மாதம் 5ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த மாதம் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் காங். போராட்டம்

அக்னிபாதை திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி  நேற்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடந்தது. சட்டீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

Related Stories: