இயற்கை விவசாயத்தை கடைபிடிப்போம் ஆரோக்கியம் காப்போம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘விவசாயம் நம்முடைய உயிர்நாடி. இதற்கு பெரிய அளவில் நிலம் வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்முடைய வீட்டில், மொட்டை மாடியோ அல்லது பால்கனி இருந்தாலோ அதில் சிறிய அளவில் நாம் விரும்பும் காய்கறிகளை பயிரிடலாம். ஒரு சில பெண்கள் இதனை தொழிலாகவும் மாற்றி அமைத்துள்ளனர். மேலும் நம்முடைய வீட்டு தேவைக்கான காய்கறிகளை நாமே பயிரிடலாம்’’ என்கிறார் சேலத்தை சேர்ந்த ஆரண்யா அல்லி.

‘‘சொந்த  ஊரு ராசி புரம் அருகே உள்ள தொப்பப்பட்டி. நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவள். 12ம் வகுப்பு  முடித்த பிறகு வீட்டில் திருமணம் செய்திட்டாங்க. கல்யாணத்திற்கு பிறகு கணவருடன் சேலத்தில செட்டிலானேன். எனக்கு பெரிய அளவில் சமையல் தெரியாது. கிராமத்தில் வளர்ந்ததால், அங்கு வழக்கமா கத்தரிக்காய், முருங்கை, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் தான் பயிர் செய்வாங்க. அந்த காய்கறிகள் எனக்கு பழக்கமாக இருந்தது. சேலம் டவுனில் முட்டைகோஸ், காலிஃபிளவர், சவ் சவ், குடைமிளகாய் போன்ற காய்கறிகள் எல்லாம் கடைகளில் விற்பனை செய்வதைப் பார்த்தேன். இந்த காய்கறிகளை எப்படி சமைக்கணும்ன்னு கூட எனக்கு தெரியல.

மேலும் வீட்டில் விவசாயம் என்பதால், அரிசி, பருப்பு முதல் அங்கு தோட்டத்தில் விளைவிக்கும் காய்கறிகள் எல்லாம் ஊர்ல இருந்து அனுப்பிடுவாங்க. மற்ற காய்கறிகளை நான் இங்கு வாங்கிக் கொள்வேன். நாளடைவில் சமையல் குறித்து புத்தகம், தொலைக்காட்சி மற்றும் யூடியூபில் பார்த்து தெரிந்து கொண்டேன். அதன் மூலம் எனக்கு பரிச்சயமற்ற காய்கறிகளையும் எவ்வாறு சமைக்க வேண்டும் என்றும் கற்றுக் கொண்டேன். ஆனாலும் ஊரில் இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறியில் உள்ள சுவை நான் மார்க்கெட்டில் ரசாயனம் கலந்து விளைவிக்கும் காய்கறிகளில் இல்லை’’ என்றவர் தானே காய்கறிகளை பயிரிட ஆரம்பித்துள்ளார்.

‘‘குடும்பம் குழந்தைகள்ன்னு ஆரம்பத்தில் நான் கொஞ்சம் பிசியாக இருந்தேன். அவர்கள் வளர்ந்த பிறகு எனக்கு நேரம் நிறைய இருந்தது. அதை பயனுள்ளதாக மாற்றலாம்ன்னு தையல் கலையை கற்றுக் கொண்டேன். சுடிதார், ஜாக்கெட் என தெரிந்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தைத்து கொடுக்க ஆரம்பித்தேன். விவசாய குடும்பம் என்பதால், எனக்கும் செடிகளுக்கும் எப்போதும் ஒரு சிறிய உறவு இருந்தது. அதனால் முதலில் பூச் செடிகளை வளர்க்கலாம்ன்னு... ரோஜா, செம்பருத்தி என வண்ண மலர்களை வாங்கி வளர்த்தேன்.

இதற்கிடையில் ஊரில் இருந்து காய்கறிகள் வருவது குறைய ஆரம்பித்தது. அதனால் தொட்டிகளில் சிறிய அளவில் தக்காளி, பச்சை மிளகாய், கீரை போன்ற செடிகளை வைக்க தொடங்கினேன். இந்த செடிகளை மிகவும் கவனமாக பராமரித்தேன். முதன் முதலில் தக்காளி பழம் காய்த்த போது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்தது. மேலும் கீரைகளை சமைத்த போது அதன் சுவையும் அபாரமாக இருந்தது. இதன் மூலம் வீட்டிலேயே மற்ற காய்கறிகளையும் பயிர் செய்யலாம்ன்னு முடிவு செய்தேன். ஒவ்வொரு காய்கறி விதைகளையும் வாங்கி பயிரிட ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் இதனை பராமரிப்பதே என்னுடைய முழு வேலையாக மாறியது.

பெரிய நிலத்தில் பயிர் செய்யும் போது, அதை பராமரிப்பது அவ்வளவு கடினமாக இருக்காது. ஆனால் வீடு முழுக்க தொட்டிகளில் செடிகளை வைக்கும் போது, ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து பராமரிக்கணும். செடிகளில் பூச்சி வராமல் பாதுகாக்கணும். ஒரு செடியில் வந்தால், அது மற்ற செடிக்கும் பரவும். தினமும் காலை எழுந்து ஒவ்வொரு செடியையும் கண்காணித்து அதற்கு தண்ணீர் மற்றும் தேவையான உரங்கள் மற்றும் இயற்கையான முறையில் தயாரித்த மருந்துகள் எல்லாம் தெளித்த பிறகு தான் என்னுடைய மற்ற வேலைகளை ஆரம்பிப்பேன்.

இதற்காக வீட்டிலேயே நான் இயற்கை முறையில் உரங்களையும் தயாரிக்கிறேன். வீட்டில் எங்கெல்லாம் சூரிய வெளிச்சம் தென்படுகிறதோ அங்கெல்லாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு செடி இருக்கும்’’ என்றவர் இயற்கை விவசாயம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகிறாராம்.

‘‘ஆரம்பத்தில் வாடகை வீடு என்பதால் என்னால் பெரிய அளவில் செடிகளை வளர்க்க முடியவில்லை. இப்போது சொந்தமாக வீடு கட்டி அங்கு குடிபெயர்ந்துவிட்டோம். வீட்டைச் சுற்றி கொய்யா, மாதுளை, எலுமிச்சை மரங்கள் வைத்திருக்கேன். செடிகளை ஒரு குழந்தையை போல் பராமரிக்கணும்.

தினமும் அவற்றுடன் பேசும் போது அவை நன்கு செழிப்பாக வளரும் என்பது என்னுடைய நம்பிக்கை. என் வீட்டில் உள்ள செடிகளை பார்த்து பலர் அவர்கள் வீட்டிலும் இது போல் சிறிய அளவில் தோட்டம் வைக்க ஆலோசனை வழங்குங்கள் என்று கேட்டார்கள். இதுவரை 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செடிகளை வைத்து அதை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று நேரடியாகவும் ஆன்லைன் முறையிலும் ஆலோசனையும் வழங்கி வருகிறேன்’’ என்றவர் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தருகிறார்.

‘‘தையல் தொழிலில் ஈடுபட்ட போது, துணிகளை தைப்பது மட்டுமில்லாமல், புடவைகளை விற்பனையும் செய்யலாம்ன்னு எண்ணம் ஏற்பட்டது. எனக்கு கைத்தறி புடவைகள் மேல் எப்போதும் மோகமுண்டு. பட்டாக இருந்தாலும், கைத்தறிப் புடவைகளை தேடிப் போய் வாங்குவேன். என்னைப் போல் கைத்தறி புடவைகளை விரும்பும் பெண்கள் இருப்பார்கள்.

அவர்களுக்காக, ஏன் கைத்தறி புடவையினை நம் நெசவாளர்களிடம் இருந்து வாங்கி விற்பனை செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருமானம் ஏற்படுத்தி தரமுடியும். இயந்திரங்களால் நெய்யப்படும் புடவைகளைவிட கையால் நெய்யப்படும் புடவைகளுக்கு மதிப்பு அதிகம். நம் பாரம்பரியத்தை எல்லாரும் மறந்துவிட்டோம். அதை மீண்டும் மீட்டெடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை’’ என்ற ஆரண்யா அல்லி பெண் சாதனையாளர் விருதினை பெற்றுள்ளார்.

தொகுப்பு: ஆனந்தி ஜெயராமன்

Related Stories:

>