மாங்காடு அருகே இளைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

குன்றத்தூர்: கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து தமிழக அரசு மீண்டும் கட்டாயப்படுத்தி உள்ளது. அவ்வாறு முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நேற்று மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர், தாமாக முன்வந்து முககவசம் அணிவதன் அவசியத்தை மக்களிடையே எடுத்துக் கூறினர். மேலும், முககவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிப்பது மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. ₹ 5 மாஸ்க் போட்டுக்கோ, இல்லன்னா ₹ 500 அபராதம் என்று கூறியவாறு, இலவசமாக முகக்கவசத்தை அணிவித்ததுடன், காய்ச்சல் பரவாமல் இருக்க கபசுர குடிநீரும் அளித்தனர். வாலிபர்களின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: