ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

சென்னை: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளை தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளில் பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழந்து வந்தனர். இதனால் பல்வேறு சமூகப் பொருளாதாரக் குற்றங்களும், தற்கொலை சம்பவங்களும் நிகழ்வதை அரசின் கவனத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகள் கொண்டு வந்தன.

இதையடுத்து, கடந்த 10ம் தேதி ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இந்த விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், விளையாட்டுகளை விளையாட தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திடவும் குழு ஒன்றினை அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார். இந்த குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், ஏடிஜிபி வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழு தனது அறிக்கையை நேற்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது. இந்த அறிக்கை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிகிறது.

Related Stories: