சுயநலவாதிகளால் ஒற்றை தலைமை பிரச்னை தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு புகார்: ‘எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை’

சென்னை: சுயநலவாதிகளால் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுப்பப்பட்டது. நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம் அனுப்பி உள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 12.09.2017 அன்று அதிமுக சட்ட விதிகள் திருத்தப்பட்டு, அதன் மூலம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் துணை விதி 20-கி-ன் படி உருவாக்கப்பட்டன. மேற்கண்ட இரண்டு பதவிகளும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இப்பதவிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். தொடக்க காலத்தில் இருந்த விதியை கொண்டு வருவதற்கு முன்பு இருந்த பொதுச் செயலாளர் பதவியைத் தேர்ந்தெடுக்க கட்சியின் முதன்மை உறுப்பினர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு.

12.09.2017 அன்று திருத்தப்பட்ட துணைச் சட்ட விதி 20-கி (2) 01.12.2021 அன்று தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மேலும் திருத்தப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கட்சியின் முதன்மை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை விதியை பொதுக்குழுவோ, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரோ திருத்தவோ மாற்றவோ அல்லது நீக்கவோ கூடாது. கடந்த 2.12.2021ம் அன்று ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், போட்டி இல்லாததால் 6.12.2021 ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களால், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, புதிய உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டதற்கான பட்டியலை 29.04.2022ம் அன்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து உள்ளோம். அதிமுக பொதுக்குழு கூட்டம் 23.06.2022 அன்று நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் 2.6.2002 அன்று அறிவிக்கப்பட்டது.

பொதுக்குழு கூட்டம் எவ்வாறு நடத்துவது, என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றுவது போன்ற விவகாரங்கள் குறித்து  14.6.22 அன்று  ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அமைக்கப்பட்ட 12 பேர் கொண் தீர்மான கமிட்டி குழு 23 தீர்மானங்களை ஒருங்கிணைப்பாளர் மற்று இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலுக்கு சமர்ப்பித்தது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் இறுதி ஒப்புதல் அளித்து, இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலுக்கு அனுப்பி, இந்த 23 தீர்மானங்கள்தான் பொதுக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதிமுக சட்டவிதிகள் படி, கட்சி நிர்வாகத்தை நிர்வகிப்பதற்கான மிக உயர்ந்த அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது.

23 தீர்மானங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் பெறப்பட்டு, கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அலுவலக மேலாளர் மகாலிங்கம் 22.6.22 அன்று பெற்று கொண்டார். ஆனால், திடீரென கட்சியின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை காரணம் காட்டி, கட்சிக்குள் உள்ள சில சுயநலவாதிகள் ஒற்றை தலைமை பிரச்னையை எழுப்பி உள்ளனர்.

பொதுக்குழு கூட்டத்தில் பிரிந்து சென்ற பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் அநாகரீகமான முறையில் குரல் எழுப்பி ஒருங்கிணைப்பாளருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். எனவே, ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் பொதுக்குழுவே சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி அந்த இடத்தை விட்டு வெளியேறினர். பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இல்லாத அங்கீகரிக்கப்படாத நபர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் இருந்த சிலர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வீசியதும், கட்சியின் ஒருங்கிணைப்பாளரை அழைத்துச் சென்ற போலீஸ் பாதுகாப்பு அதிகாரி மீதும் தண்ணீர் பாட்டில் ஒன்று தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

26.06.2022 இரவு சுமார் 9.00 மணியளவில், செய்தி சேனல்களில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், 27.6.22 காலை 10 மணிக்கு தலைமை அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், கையொப்பம் ஏதும் இல்லை. அதில் ‘தலைமை அலுவலக செயலாளர்’ என்ற பெயர் மட்டுமே இருந்தது.

தலைமைக் கழக செயலாளரின் பெயரால் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பது சட்டவிரோதமானது.இணை ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து ஒருங்கிணைப்பாளராக உள்ள நானும், எந்த ஒரு கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கும் ஒரே அதிகாரம் உடையவன். அவர்கள் கூறப்பட்ட தகவலை அனைத்து கட்சி அலுவலகப் பொறுப்பாளர்களுக்கும்  அனுப்பவில்லை, அவர்கள் வேண்டுமென்றே செய்தி மற்றும் அச்சு ஊடகங்களில் பரப்பியுள்ளனர். 27.06.2022 அன்று நடைபெற்ற சட்டத்திற்கு புறம்பான தலைமையக அலுவலக நிர்வாகிகள் கூட்டத்தில் 11.07.2022 அன்று நடைபெறும் கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று ஒருதலைப்பட்சமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த முடிவையும் அங்கீகரிக்கவில்லை. கட்சியின் பொருளாளர் என்ற முறையில் பொதுக்குழு கூட்டத்தில் கணக்கு அறிக்கையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், நான் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படவில்லை. எனவே, தற்போதைய பிரதிநிதித்துவத்தை மரியாதையுடன் முன் சமர்ப்பிக்கிறோம். இவ்வாறு அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: