×

போதைப் பொருளை மாணவர்கள் தவிர்க்கவும், விளையாட்டு திறனை மேம்படுத்தவும் சூப்பர் லீக் மற்றும் பிரமியர் லீக் விளையாட்டுப் போட்டிகள்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: உலக போதைப் பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மது விலக்கு மற்றும் ஆயத்திர்வைத்துறை சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எஸ்பி பி.சி.கல்யான் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  

மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணி, சி.வி.நாயுடு சாலை, ஜெ.என்.சாலை வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியின் போது போதைப் பொருட்களை தொடாமல் சாதனை படைப்போம், போதை தரும் மகிழ்ச்சி, உன்னைத் தேடி வரும் இகழ்ச்சி, போதை தவிர் கல்வியால் நிமிர் போன்ற போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டு சென்றனர்.

பிறகு மாவட்ட கலெக்டர் கூறியதாவது, தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவது நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் சுகாதார வல்லுனர்கள் பல்வேறு ஆலோசனை வழங்கி வருகின்றனர். அதே போல் செல்போனில் மொபைல் கேம், ஆன்லைன் கேம் விளையாட்டிலும் மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர். இது போன்று அடிமையாகிப் போன மாணவர்களை மீட்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கஞ்சா போன்ற போதைப் பொருட்களை உபயோகப்படுத்துவதை தடுக்க பல்வேறு சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றோம். மேலும், 15 முதல் 17 வயது வரையிலான மாணவர்கள் போதைக்கு அடிமையாவதலிருந்து மீள்வது குறித்தும் போதைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப் பொருள் நாட்டத்தை மாணவர்கள் தவிர்ப்பதற்கும், விளையாட்டுத்திறன் மற்றும் ஆர்வத்தை மேம்படுத்தவும் சூப்பர் லீக், பிரமியர் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது, என்றார்.

மாவட்ட போலீஸ் எஸ்பி பி.சி.கல்யான் கூறியதாவது, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் எங்கிருந்து வருகிறது. அதை கொண்டு வரும் நபர்கள் யார், அதனை கொடுத்து அனுப்பும் நபர் யார் அவர்களது வங்கி பணவர்த்தனை ஆகியவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பழக்கத்தால் அடிமையான மாணவர்களிடம் எப்படி இந்த பழக்கம் வந்தது என்பதை கண்டறிந்து அதன்படி அதிலிருந்து மீள அவர்களுக்கு விழிப்புணர்வு காவல் துறை சார்பில் வழங்கப்படும், என்றார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் கலால் உதவி ஆணையர்கள் ராஜேஸ்வரி, மணிகண்டன், மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் தேன்மொழி,  பூபால முருகன், பள்ளிகளின் ஆய்வாளர் சௌத்திரி, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Tags : Super League ,Premier League , Super League and Premier League Games: Collector Information
× RELATED மே 4ல் ஐஎஸ்எல் பைனல்: நாக் அவுட் சுற்றில் சென்னை