×

மடிப்பாக்கம் பாதாள சாக்கடை விவகாரம் கால நிர்ணயம் செய்வதற்கு ஐகோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

சென்னை: ‘மடிப்பாக்கம் பாதாள சாக்கடை திட்டம் என்பது அரசின் கொள்கை சார்ந்தது என்பதால் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கால நிர்ணயம் செய்ய அதிகாரம் இல்லை’ என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை மாநகராட்சியுடன் கடந்த 2011ம் ஆண்டு இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தவில்லை என அய்யம்பெருமாள் என்பவர் கடந்த 2019ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அப்போது, மடிப்பாக்கம் பகுதிக்கு ரூ.160 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க தனியாரிடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. டெண்டர் காலம் 6 மாதம், அதன்பின்னர் 36 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும் என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிமன்றம், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை 2020ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க 2019ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி பணிகள் முடிக்கப்படவில்லை என அய்யம்பெருமாள் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இதை பரிசீலனை செய்து அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பை உறுதி செய்ததோடு, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர், செயற்பொறியாளர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘மடிப்பாக்கம் பாதாள சாக்கடை திட்டம் என்பது அரசின் கொள்கை சார்ந்த முடிவாகும். இதில் நீதிமன்றங்கள் தலையிட்டு கால நிர்ணயம் செய்ய அதிகாரம் இல்லை என்பதால் பதிவு செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும் இதுபோன்று செய்வது என்பது உயர் நீதிமன்றத்தின் அரசியல் சாசன அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Court ,Madipakkam ,Tamil Nadu government ,Supreme Court , Court has no jurisdiction to fix Madipakkam underground sewerage issue: Tamil Nadu government petitions Supreme Court
× RELATED பெங்களூருவில் உள்ள ஜெயலலிதா நகைகளை...