அக்னி பாதை திட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: சென்னையில் ஏராளமானோர் பங்கேற்பு

சென்னை: ஒன்றிய அரசின் அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பொது செயலாளர் வாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அடையாறு துரை தலைமையில் அடையாறு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை தலைவர் தாமோதரன், மலர்கொடி, அடையாறு ரவி, தலைமை நிலைய செயலாளர் திருவான்மியூர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர்கள் நலனை பாதிக்கும் அக்னிபாதை திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.ஏ.முத்தழகன் தலைமையில் சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சி.டி.மெய்யப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல சென்னையில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: