கீழ் கோத்தகிரி மெட்டுக்கள் கிராமத்தில் கரடி தாக்கியவரை சிகிச்சைக்காக தொட்டில் கட்டி தூக்கிச்சென்ற அவலம்: சாலை வசதி கேட்டு பழங்குடியின மக்கள் கோரிக்கை

குன்னூர்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் கரிக்கையூர், வாகப்பண்ணை, மெட்டுக்கள் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு இருளர் பழங்குடியின மக்கள் சுமார் 600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தில் இந்த கிராமம் தனித்தீவுபோல காட்சியளிக்கிறது. இங்குள்ள மக்கள் தேன் எடுத்தல், குருமிளகு விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் வாழும் இந்த மக்கள், சாலை வசதிகள் இல்லாததால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலையில் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மெட்டுக்கள் அருகே குடகூர் கிராமத்தை சேர்ந்த  சூணன் என்பவரை கரடி தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் தொட்டில் கட்டி சுமார் 4 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியில் சுமந்து வந்தனர்.

இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘‘கரிக்கையூர் பகுதியை சுற்றியுள்ள பழங்குடி கிராமங்களில் வசிக்கும் மக்கள் மருத்துவ தேவை என்றால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து செல்லும் அவலநிலை தொடர்கிறது. நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலை இருந்து வருகிறது. எனவே  பழங்குடியின கிராமங்களுக்கு சாலை அமைத்து தர வேண்டும்’’ என்றார். விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் முதல் ஏர் ஆம்புலன்ஸ் வரை கிடைக்கும். இந்த நவீன உலகில் இந்த பழங்குடியின மக்களுக்கு தொட்டில் தான் இன்னும் ஆம்புலன்சாகவே உள்ளது. சாலை வசதி ஏற்படுத்தி தந்தால்  உரிய நேரத்தில் காப்பாற்றப்பட்டு பல மனித உயிர்களை பாதுகாக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: