×

தனுஷ்கோடி கடல் பகுதியில் மணல் திட்டில் மயங்கி கிடந்த இலங்கை தமிழர் 2 பேர் மீட்பு

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில் மணல் திட்டில் மயங்கி கிடந்த 2 இலங்கை தமிழர்களை, போலீசார் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் கடல் பகுதியில், கடற்கரை மணல் திட்டில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கையை சேர்ந்த 2 பேரை மரைன் போலீசார், மீட்டு சோதனை செய்தனர். அவர்கள் இலங்கை கொல்லர்ஸ்ரீகுளத்தை சேர்ந்த பெரியண்ணன் (82), திரிகோணமலையை சேர்ந்த பரமேஸ்வரி (71) என்பது தெரியவந்தது. இருவரும் நேற்று முன்தினம் இரவில் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து படகில் ஏற்றி வரப்பட்டு, இங்கு இறக்கி விடப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மயக்க நிலையில் இருந்ததால் போலீசார், இருவருக்கும் குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மயக்க நிலையிலேயே இருந்தனர். வயதான பெண்ணின் நெற்றியில் அடிபட்ட காயம் இருந்தது. இருவரையும் ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்த போலீசார், ஆம்புலன்ஸில் ஏற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் முதியவர் கண் திறந்தார். ஆனால் பேச முடியவில்லை. மூதாட்டி மயக்க நிலையிலேயே இருந்தார். இருவரும் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

Tags : Dhanushkodi , Two Sri Lankan Tamils rescued after being stranded on a sand dune in the Dhanushkodi sea area
× RELATED தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு...