திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் மர்ம அறைகள்: போலீஸ் சோதனையில் அதிர்ச்சி தகவல்; கர்நாடக இளம்பெண் மாயமானார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர் நித்யானந்தா. பல்வேறு சர்ச்சைகள், புகார்களில் சிக்கியுள்ள நித்யானந்தா, கர்நாடக மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமம் நடத்தி வந்தார். அவருக்கு திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், வெளிநாடுகளிலும் ஆசிரமம் உள்ளது. நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அதிலிருந்து தப்பிக்க கைலாசா எனும் பெயரில் சிறிய தீவு பகுதியில் அவரது சீடர்களுடன் தங்கியிருப்பதாகவும், அவரது உடல் நிலை மோசமாகி கவலைக்கிடமாக இருப்பதாகவும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் நாகேஷ், அவரது 21 வயது மகளை சட்ட விரோதமாக நித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாக போலீசில் கொடுத்த புகார், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஓய்வு பெற்ற பொறியாளர் நாகேஷ், கல்லூரி பேராசிரியரான அவரது மனைவி மாலா மற்றும் 2 மகள்களும், நித்தியானந்தாவின் சத்சங்கத்தால் ஈர்க்கப்பட்டு அவரது சீடர்களாக இருந்துள்ளனர். பிடதியில் உள்ள ஆசிரமத்துக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், நித்தியானந்தாவின் சர்ச்சைக்குரிய மறுபக்கம் தெரிந்ததும், அதிலிருந்து விலகியுள்ளனர்.

ஆனால், அவரது இளைய மகளான 21 வயது இளம்பெண் மட்டும், தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமத்திலேயே தங்கியுள்ளார். அவரை மீட்க பலமுறை அவரது பெற்றோர் முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமத்தில் இளம்பெண்ணை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாகவும், அவரை மீட்டு தரும்படியும் நேற்று முன்தினம் திருவண்ணாமலை தாலுகா போலீசில் அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில், 10க்கும் மேற்பட்ட போலீசார் ஆசிரமத்துக்குள் நுழைந்து சுமார் 2 மணி நேரம் சோதனை நடத்தினர்.

அப்போது, நித்யானந்தா ஆசிரமத்தில் ஒரு அறையை திறந்ததும், அதனுள் மற்றொரு அறை என்ற வித்தியாசமான கட்டமைப்பில் அறைகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், 2 அறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. அதேபோல், 2 அறைகளுக்கான சாவி தங்களிடம் இல்லை என தெரிவித்த, நிதியானந்தாவின் 3 பெண் சீடர்கள் அவற்றை திறந்து காட்ட மறுத்துள்ளனர். ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்துள்ள ஆசிரமத்தில், 3 பெண்கள் மட்டுமே இருந்தது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும், கர்நாடக இளம்பெண்ணை சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை ஆசிரமத்தில் பார்த்ததாக உறுதியான தகவல் கிடைத்தது என அவரது பெற்றோர் தெரிவித்த நிலையில், எப்படி அவர் வெளியேறினார், எந்த இடத்துக்கு சென்றார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, மீண்டும் திடீர் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது, நித்யானந்தா ஆசிரமத்தில் மறைந்திருக்கும் மேலும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது,

* பேஸ்புக் நேரலையில் விளக்கம்

கைலாசா நித்யானந்தா எனும் பெயரில் இயங்கும் முகநூல் (பேஸ்புக்) நேரலையில் இளம்பெண்ணின் 7 நிமிட வீடியோ ஒளிபரப்பானது. அதில், நித்யானந்தா ஆசிரமத்தில் அவரது சீடர்கள் சுய விருப்பத்திலேயே தங்கியிருப்பதாகவும், யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும், நித்யானந்தா குறித்து வெளியாகும் தகவல்கள் தவறானது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் எங்கிருந்து பேசினார் என்ற விபரம் குறிப்பிடவில்லை. அந்த காட்சியில் பின்னணி எதுவும் தெரியாதபடி மறைத்திருந்தனர். இதனால் இளம்பெண் எந்த இடத்தில் இருக்கிறார் என்ற சர்ச்சை நீடிக்கிறது.

Related Stories: