முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அனைத்து துறை அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது, புதிய தொழில்களுக்கு அனுமதி வழங்குவது, மேகாதது அணைக்கு எதிராக தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ள தடுப்பு பணிகள், மீட்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள், கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்து விரைவுபடுத்தவும் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளை தடை செய்வது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு பல்வேறு ஆய்விற்கு பிறகு நேற்று முதல்வரிடம் ஆன்லைன் ரம்மி மற்றும் இணையதள விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தது. இதுகுறித்தும், நேற்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்படி, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய புதிய சட்ட மசோதா சீர்படுத்த இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: