சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேட்டில் முகாந்திரம் இருப்பதால் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு; லஞ்ச ஒழிப்புத்துறை பதில் தர நீதிபதிகள் உத்தரவு

சென்னை: சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் டெண்டர் முறைகேடு தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை, கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கான டெண்டர் விட்டதில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே எஸ்.பி.வேலுமணி வீடுகள் மற்றும் அலுவலகங்கள், அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து  செய்யக்கோரி வேலுமணி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு வேலுமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் (கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்) எஸ்.வி.ராஜூ ஆஜராகி,  மனுவில் கூறப்பட்ட புகார்களில் உள்ள முகாந்திரம் குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் கண்காணிப்பில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை முடிவில், வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டது. வழக்கை முடித்து வைப்பது என்று முடிவு செய்த பின் மீண்டும் வழக்குப்பதிந்தது தவறானது.உச்ச நீதிமன்ற அனுமதியுடன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளோம். அரசு ஏற்கனவே எடுத்த முடிவை மாற்ற முடியாது. உள்நோக்கத்துடன் வழக்குப் பதியப்பட்டுள்ளதால் வழக்குக்கு தடை விதிக்க வேண்டுமென்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, வழக்குப்பதிவு செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை. வழக்கை ரத்து செய்யக்கோரி உரிமை உள்ளது என்ற போதும், ரிட் மனுவாக எப்படி தாக்கல் செய்ய முடியும் என்று கேட்டார்.

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதால்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர். இதைக் கேட்ட நீதிபதிகள், மனுதாரர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குக்கு தடை விதிக்க முடியாது.  வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு  தமிழக அரசும், லஞ்ச ஒழிப்புத் துறையும், மனுதாரர்களும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 25க்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: