சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய இருவரை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நேற்று மதியம் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அவர்களை சுமார்
30 நிமிடம் வரை சந்தித்து அற்புதம்மாள் பேசினார்.
பின்னர், அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ‘‘ராபர்ட் பயாஸிற்கு உடல்நிலை சரியில்லை என்பதை கேள்வியுற்று அவரை சந்திக்க வந்தேன். அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, அவருக்கு பரோல் வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் வகையில் ஓரிரு மாதங்களில் அரசும், முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். பேரறிவாளனுக்கு பெண் பார்க்கும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.’’ இவ்வாறு அற்புதம்மாள் தெரிவித்தார்.
