களக்காடு தலையணையில் தடுப்பணை உயரத்தை அதிகரிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

களக்காடு: களக்காடு தலையணை சுற்றுலா ஸ்தலத்தில் தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது.

வனத்துறையினரால் சுற்றுசூழல் சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி, குளுமையுடன் ஓடுவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், டூவீலர்கள், வேன்களில் தலையணைக்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள தடுப்பணை வழியாக அருவி போல் கொட்டும் தண்ணீரில் தலையை நனைத்து புத்துணர்வுடன் செல்கின்றனர்.

ஆனால் தடுப்பணையில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்றே சுற்றுலா பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். தண்ணீர் அதிகளவில் வரும் போது தடுப்பணையில் இழுப்பு சக்தி அதிகம் என்பதால் கண் இமைக்கும் நேரத்தில் சுற்றுலாபயணிகளை தண்ணீர் இழுத்து செல்வதால் அவர்கள் கீழே விழுந்து படுகாயமடைகின்றனர்.

இதனை தடுக்க தடுப்பணையில் தடுப்புகள் ஏற்படுத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுபோல தடுப்பணையில் உயரம் குறைவாக இருப்பதால் அதில் குளிப்பதற்கு சிரமமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். எனவே சுற்றுலா பயணிகள் குளிக்க ஏதுவாக தடுப்பணையின் உயரத்தையும் அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: