திருப்பதி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் பக்தர்கள்; வாகன ஓட்டிகள் அச்சம்

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இதனால் பக்தர்கள், வாகனஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லவும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரவும் 2 மலைப்பாதைகள் உள்ளன. இந்த பாதைகள் வழியாக ஆந்திர மாநில அரசு பஸ்கள், தேவஸ்தான பஸ்கள் மற்றும் ஜீப்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் திருமலை சென்று வருகின்றனர்.

இதனால் இந்த சாலைகள் எப்போதும் பக்தர்களின் வாகனங்களால் நிறைந்து காணப்படும். இந்த மலைப்பாதையில் யானை கால் வளைவு என்ற இடம் உள்ளது. இந்த இடத்தின் அருகே உள்ள வனப்பகுதி வழியாக நேற்று 11 யானைகள் கூட்டமாக சாலையை கடக்க முயன்றன. அப்போது இவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வாகனஓட்டிகள் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, தேவஸ்தான வனத்துறை மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கூட்டமாக நின்று கொண்டிருந்த யானைகளை ஒலிபெருக்கி மூலம் சத்தம் எழுப்பியும், மேளம் அடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

இதனால், அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த சில தினங்களாக திருமலையில் உள்ள வனப்பகுதியில் யானை கூட்டம் சுற்றி வருகிறது. யானைகளால் பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

தொடர்ந்து, யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். யானைகளை திருப்பதி நோக்கி உள்ள வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்’ என்றனர்.

Related Stories: