×

நித்தியானந்தா ஆசிரம பாதாள அறையில் கர்நாடக இளம்பெண் அடைப்பு? வீடியோ காலில் பேசியதால் பரபரப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா ஆசிரம பாதாள அறையில் கர்நாடக இளம்பெண் அடைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் மீண்டும் சோதனை நடத்த உள்ளனர். திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர் நித்தியானந்தா. திருவண்ணாமலை, கர்நாடக மாநிலம் பிடதி உள்பட உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நிறுவியுள்ளார். இவற்றில் ஏராளமான சீடர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுகள், மோசடி என பல்வேறு புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்டர்போல் மூலம் அவருக்கு ரெட்கார்னர் நோட்டீசும் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நித்தியானந்தா, பசுபிக் கடலில் சிறிய தீவை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற பெயரில் நாட்டை உருவாக்கி அங்கு தற்போது சமாதி நிலையில் உள்ளதாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த 20 வயது இளம்பெண் திருவண்ணாமலை நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாகவும் அவரை மீட்டு தரவேண்டும் என அவரது பெற்றோர் கர்நாடக போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து கர்நாடக போலீசார் தகவல்படி திருவண்ணாமலை தாலுகா இன்ஸ்பெக்டர் ஹேமலதா, எஸ்ஐ சுமன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் நேற்றிரவு திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தில் சோதனையிட சென்றனர்.

அவர்களுடன் இளம்பெண்ணின் பெற்றோரும் சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க சீடர்கள் மறுத்தனர். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இரவு 9 மணி முதல் 10 மணி வரை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் இளம்பெண் குறித்த தகவல் கிடைக்கவில்லை. ஆனால் ஆசிரமத்திற்குள் பாதாள அறைகள் உள்ளது. அதனை திறக்கும்படி போலீசார் கூறினர். அதற்கு, ‘அறைகளின் சாவி தங்களிடம் இல்லை. தலைமை ஆசிரம நிர்வாகிகளிடம் உள்ளது, பாதாள அறைகளில் மின்விளக்கு வசதி இல்லை’ என ஆசிரம பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த பாதாள அறைகளில் எங்காவது இளம்பெண் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. எனவே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Tags : Nitiyananda Asarma , Carnatic girl blockage in Nithiyananda Ashram cellar? Excitement as the video speaks on foot
× RELATED யானை தாக்கி விவசாயி பலி