பத்திரிகையாளர் நல வாரியத்தின் இரண்டாவது கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: பத்திரிகையாளர் நல வாரியத்தின் இரண்டாவது கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் முதன்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துப் பெருமை சேர்த்துள்ளார்கள். அதனடிப்படையில் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் ‘அரசாணை (நிலை) எண்.171 நாள் 1.12.2021 மூலம் பத்திரிகையாளர் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, பத்திரிகையாளர்கள் நல வாரியத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, பயனாளிகளைத் தேர்வு செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களைத் தலைவராகவும், அலுவல்சார் உறுப்பினர்களாக 7 நபர்களையும், அலுவல் சாரா உறுப்பினர்களாக 6 நபர்களையும் கொண்ட நல வாரியக் குழு அமைக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது. அவ்வகையில், பத்திரிகையாளர் நல வாரியத்தின் முதலாவது குழு கூட்டம் 22.4.2022 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகையின் ஆறாவது தளத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறையின் கூட்டரங்கில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் நல வாரியத்தின் இரண்டாவது கூட்டம் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் 28.6.2022 அன்று காலை 11.00 மணி அளவில், நாமக்கல் கவிஞர் மாளிகையின் ஆறாவது தளத்திலுள்ள பள்ளிக் கல்வித் துறையின் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: