தங்கக் கடத்தலில் பினராயி விஜயனுக்கு தொடர்பு என முழக்கம்: கூச்சல் குழப்பத்தால் கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

திருவனந்தபுரம்: வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து கேரள சட்டசபையில் இன்று காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. 15வது கேரள சட்டசபையின் 5வது கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஜூலை 27ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த மாதம் எர்ணாகுளம் மாவட்டம் திருக்காக்கரை தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் உமா தாமஸ் அபார வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரும் உற்சாகம் கிடைத்துள்ளது. இந்த உற்சாகத்துடன் காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் இன்று சட்டசபைக்கு வந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 9 மணியளவில் சட்டசபை கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து சபைக்கு வந்திருந்தனர். மேலும் வயநாடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் பேனர்களையும் எதிர்கட்சி உறுப்பினர்கள் சபைக்கு கொண்டு வந்திருந்தனர்.

வழக்கமாக கேள்வி நேரம் முடிந்த பின்னர்தான் ஒத்திவைப்பு தீர்மானமோ அல்லது விவாதமோ தொடங்கும். ஆனால் கேள்வி நேரம் தொடங்கிய உடனேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேனர்களை தூக்கிக் காண்பித்து ஆளுங்கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சபைக்குள் பேனர்களுடன் போராட்டம் நடத்தக்கூடாது என்று சபாநாயகர் ராஜேஷ் எதிர்க்கட்சி உறுப்பினர்களை எச்சரித்தார். ஆனால் அதை ஏற்காமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கிய 5 நிமிடத்திலேயே சபையை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறிவிட்டு சபாநாயகர் ராஜேஷ் இருக்கையை விட்டு எழுந்து சென்றார். இதன்பின்னர் சபாநாயகர் ராஜேஷ் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். கேள்வி நேரம் முடிந்த பின்னர் ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு அனுமதி அளிப்பதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து சபை மீண்டும் கூடியது. முதலில் சமீபத்தில் மரணமடைந்த சட்டசபை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் அமைச்சர்கள் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்ய தொடங்கினர். அப்போது மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேனர்களை தூக்கிக் காண்பித்து சபையின் மையப்பகுதிக்கு வந்து தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து அமைச்சர்கள் மசோதாக்களை தாக்கல் செய்து முடித்தவுடன் சபை நாள் முழுதும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ராஜேஷ் கூறினார்.

Related Stories: