×

துறையூர் அடுத்த பச்சைமலையில் மரவள்ளிக்கிழங்கு, முந்திரி சாகுபடி குறைவால் வாழ்வாதாரம் பாதிப்பு-மழைவாழ் மக்கள் வேதனை

* மலையில் உள்ள சுமார் 15,000 ஏக்கர் நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு, முந்திரி சாகுபடி செய்து வருகின்றனர்.

* 2000 கிலோ முந்திரி சாகுபடி செய்தவர்கள் தற்போது 20 கிலோ கூட சாகுபடி செய்ய முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

துறையூர் : துறையூர் அடுத்த பச்சை மலையில் மரவள்ளிக்கிழங்கு மற்றும் முந்திரி சாகுபடி பெரியதும் பாதிக்கப்பட்டதால் மலைவாழ் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
துறையூர் அடுத்த பச்சமலையில் வண்ணாடு, கோம்பை, தென்புற நாடு என மூன்று ஊராட்சிகள் உள்ளன. இங்கு 5 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர். மலைவாழ் மக்களின் பிரதான தொழில் விவசாயம். மலையில் உள்ள சுமார் 15,000 ஏக்கர் நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு, முந்திரி சாகுபடி செய்து வருகின்றனர்.

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்ட சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி உள்ள குச்சிகளில் மாவு பூச்சிகள் தாக்கப்பட்டு, கிழங்கு விளைச்சல் இல்லாமல் போய்விட்டது. கடந்த இரண்டு வருட காலமாகவே இந்த மாவுப்பூச்சியின் தாக்கம் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர். தோட்டக்கலைத் துறையினர் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த மருந்துகள் கொடுத்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இந்த பூச்சியை கட்டுப்படுத்த என்ன வழி என்று தெரியாமல் மலைவாழ் விவசாயிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனர். அடுத்த வருடம் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் நமக்கு முன்னேற்றம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உள்ளனர். இது மட்டுமின்றி இவர்களை புரட்டிப் போடும் வகையில் முந்திரி மரத்தில் பூக்கள் கருகி விளைச்சல் இல்லாமல் தடுமாறி வருகின்றனர். 2000 கிலோ முந்திரி சாகுபடி செய்தவர்கள் தற்போது 20 கிலோ கூட சாகுபடி செய்ய முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போது மலைவாழ் மக்களின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து வருவதாக கூறுகின்றனர். எனவே தோட்டக்கலைத் துறையினர் மாவுப்பூச்சி அழிப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க தமிழக அரசு உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : cassava ,Thuraiyur , Thuraiyur: Hill farmers in the green hills next to Thuraiyur have been hit hard by cassava and cashew cultivation.
× RELATED மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு