×

சென்னை பரோல் கைதி தலைமறைவு விவகாரம்; சிறைக்கு வந்தவரை பைக்கில் அழைத்து சென்ற வார்டன்.! சிசிடிவி கேமராவில் சிக்கினார்

சேலம்: சேலம் மத்திய சிறையில் இருந்து பரோலில் சென்ற ஆயுள் தண்டனை கைதி தலைமறைவான விவகாரத்தில், சிறைக்கு திரும்பி வந்த அவரை பைக்கில் வெளியே அழைத்து சென்ற வார்டன் சிசிடிவி கேமராவில் சிக்கினார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ஹரி (எ) ஹரிகிருஷ்ணன் (44). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நன்னடத்தை அடிப்படையில் சிறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் அவ்வப்போது பரோலில் வெளியே சென்று வந்துள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன் ஹரிக்கு 3 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவர், சிறையில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினரை பார்க்க சென்றார்.

அங்கிருந்து பரோல் முடிந்து நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சேலம் சிறைக்கு அவர் வந்து சேர வேண்டும். மாலை 5.30 மணியளவில் சிறைக்கு போனில் தொடர்பு கொண்ட ஹரி, காரில் வந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவேன் எனவும் கூறியுள்ளார். ஆனால், 6 மணியை கடந்தும் அவர் வந்து சேரவில்லை. இதனால், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாரிடம் ஜெயிலர் மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். உடனே ஹரி எங்குள்ளார் என விசாரித்துள்ளனர். அதில், ஏற்கனவே பேசப்பட்ட போனில் வார்டன் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, தான் கார் டிரைவர் பேசுவதாகவும், ஹரியை சிறை வாசலில் இறக்கி விட்டு வந்து விட்டேன் எனவும் கூறியுள்ளார்.

இதனால், இரவு முழுவதும் சேலத்தில் பல்வேறு இடங்களில் ஹரியை சிறை வார்டன்கள் தீவிரமாக தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தலைமறைவான ஹரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர், மத்திய சிறை சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், மத்திய சிறைக்கு திரும்பி வந்த பரோல் கைதி ஹரியை வார்டன் ஒருவர் பைக்கில் அழைத்து சென்ற காட்சி பதிவாகியுள்ளது. அந்த வார்டனை பிடித்து சிறைத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆயுள் தண்டனை கைதி ஹரியை கடந்த 4 மாதத்தில் 3 தடவை பரோலில் விட்டதும், அதற்கு மத்திய சிறையில் பணியாற்றும் 2 வார்டன்கள் உள்பட 5 பேர் பணம் வாங்கிக் கொண்டு அனுப்பி வந்ததும், தற்போது கூட அவர் பரோலில் செல்ல பணத்தை வாங்கிக்கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. பரோல் முடிந்து சிறைக்கு வந்த கைதியிடம் பணம் கேட்டுதான் அந்த வார்டன் அழைத்து சென்றதாகவும், வார்டன்கள் உள்பட அதிகாரிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருவதால் கைதி தலைமறைவாகி விட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து கைதியை அழைத்து சென்ற வார்டன், பணம் வாங்கிக்கொண்டு பரோலில் அனுப்பிய பணியாளர்கள், அதிகாரியிடம் சிறைத்துறை உயர் அதிகாரிகள் விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என தெரிகிறது. இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai , Chennai parole prisoner absconding case; The warden who took him on a bike until he got to jail.! Caught on CCTV camera
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...