மஞ்சூரில் சூறாவளியால் ராட்சத மரம் சாய்ந்தது-நடுவழியில் தவித்த பஸ் பயணிகள்

மஞ்சூர் :  மஞ்சூர் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் ராட்சத மரம்  விழுந்ததால் நள்ளிரவு வரை அரசு பஸ்கள் நடுகாட்டில் நிறுத்தப்பட்டது.

நீலகிரி  மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை  பெய்து வருகிறது. மழையுடன் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் ஆங்காங்கே  மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப் படுகிறது.

நேற்று முன்தினம் மாலை  கிண்ணக்கொரை மீக்கேரி என்ற இடத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில்  சாலைேயாரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே சாய்ந்தது.  

அப்போது கிண்ணக்கொரை பகுதியில் இருந்து மஞ்சூர் நோக்கி சென்ற அரசு பஸ் மரம்  விழுந்ததால் மேற்கொண்டு செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து பஸ்  டிரைவர் செல்வன், நடத்துனர் சதீஷ் ஆகியோர் பயணிகள் சிலரது உதவியுடன் பஸ்  செல்லும் வகையில் மரத்தை வெட்டி அகற்றினார்கள். இதை தொடர்ந்து அரசு பஸ்  அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இந்நிலையில் அப்பகுதியில் சூறாவளி  காற்றின் வேகம் அதிகரிக்கவே மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இந்நிலையில்  மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை மற்றும் இரியசீகை பகுதிகளுக்கு பயணிகளுடன்  சென்ற 2 பஸ்கள் மரம் விழுந்ததால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சம்பவ  இடத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டது.இரவு நேரத்தில் நடுகாட்டில் பயணிகள் தவித்தனர்.  

இதை தொடர்ந்து தகவல் அறிந்து இரவு சுமார் 10 மணியளவில் கிண்ணக்கொரை  கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு சொந்தமான வாகனம் வரவழைக்கப்பட்டது.பஸ் பயணிகள் அதன் மூலம் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது  குறித்து தகவல் கிடைத்தவுடன் சாலை ஆய்வாளர் நஞ்சுண்டன் தலைமையில் விரைந்து  சென்ற சாலைபணியாளர்கள் மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையில்  இறங்கினார்கள். நீண்ட போராட்டத்திற்கு பின் நள்ளிரவு சுமார் 12 மணியளவில்  மரம் வெட்டி அகற்றப்பட்டதை தொடர்ந்து அரசு பஸ்கள் இரண்டும் அங்கிருந்து  புறப்பட்டு சென்றது.

Related Stories: